Friday, December 4, 2009 | By: காவிரி நாடன்

காயங்கள் குணமாகும்

காயங்கள் குணமாகும்

மகனே
என் ராசா
நாட்டோட முதுகெலும்புன்னு சொல்லுறாங்க
ஆனா சாபம் புடிச்ச பொழப்பய்யா
நம்ம பொழப்பு

கண்ணே கொஞ்சம் பொறுத்துக்கோ
காயங்கள் சீக்கிரமே குணமாகும்

நான் தடவி பாக்கும் உன் சரீரம்
நித்தம் முத்தங்கானும் உன் விரலு
வழியல துடிக்குதாய்யா ?
என் நெஞ்சு அடைக்குதய்யா

உன் வலி சுமக்கும் ஒரு வழியிருந்தா.....
காலத்துக்கும் சுமப்பேனே .

மாத்து துணிக்கே வழியில்ல
மருந்துக்கு எங்க போவேன் ?

உனக்கொரு மத்தாப்பு வாங்கி தர
ஒரு மாசம் வெத்தலைய ஒழிச்சேனய்யா

யாரோ போட்ட துணி
தொவச்சு, சாயம் போட்டு
கொறச்ச வெலைக்கு சந்தையில வித்தாங்க .........
ஓடிப்புடிச்சு ஒன்னளவு ஒருசோடி வாங்கியாந்தேன்

ஏழை வூட்டு அடுப்பு போல
பொசு பொசுன்னு புகை வருமே
பாம்பு மாத்தர கொஞ்சம்
சந்தையிலே பொருக்கியாந்தேன்....

நேரம் செண்டா கல்லா இருகிபோகும் சிலேபி நாலு ....
சுடச்சுட கெளறிபோட்ட பூந்தி நாலு ....
மிச்சத்துக்கு காராசேவு ....
விடிகாத்தால உனக்கு தர வீட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சேன் .


பண்டிகைக்கு மொதநா ராத்திரி ......

வகவகயா மத்தாப்பு ......
- நின்னு வேடிக்க பாத்துக்கிட்ட.
விட்டு விட்டு வெடி சத்தம் ....
-காத பயத்தோட போத்திக்கிட்ட.
விதவிதமா வானவேடிக்கை .....
-அப்பப்ப அண்ணாந்து பாத்துக்கிட்ட .

வேடிக்க பாத்துக்கிட்டே விரல் புடிச்சு
ராவெல்லாம் சுத்தி வந்த ....

மச்சு வூட்டுகாரங்க
உடச்ச மத்தாப்பும் ...உதிர்ந்த வெடியும் சும்மா கொடுக்க
புடிவாதமா மறுத்து ..மானங்காத்து
என் பின்ன மறஞ்சு நின்ன .....

வாசலிலே தல வெச்சு அப்படியே தூங்கி போன
வெடிச்சத்தம் கேட்டு வெரசா எழுந்து
வெந்நீ வெச்சு எண்ணை தேச்சு
வெளிநாட்டு தொரை போல உடுத்தி வந்த ....


என் கண்ணே பட்டுடுச்சா என் ராசா


வாங்கி தந்த பட்டாச
சிக்கனமா நீ வெடிச்சும் ...
சீக்கிரமா தீந்து போச்சு
உன் ஆசை கொஞ்சம் மீந்து போச்சு ....

கடைசியா எங்கிட்ட பத்து ரூவா
கெஞ்சி கெஞ்சி வாங்கி
பட்டாசு கடையில
மிச்சம் மீதி , உதிரி வெடி , ஓட்ட வொடசல்
பையோட வாங்கியாந்த....

உதிரிவெடி...ஒத்தவெடி...ஒன்னும் வெடிக்கலையே...
ஏழை வாழ்க்கை போல எல்லாம் பொய்யாச்சு....

ஆனா வேகங்கொறையாம
மனசு விடாம ஒன்னு செஞ்ச ...

உதிரிவெடி ,ஓலவெடி மிச்சம் மீதி உதிர்த்து போட
கெடச்சது கை நெறைய கந்தக தூளு
கடுதாசியில மடுச்சு .....திரி ஒன்னு புடுச்சு .....
நீயே வெடி செஞ்ச ...
ஓடிபோயி பத்தி கொளுத்தி...சரியா திரியில நெருப்பு வெச்ச ....
ஆனா
பாழப்போன பட்டாசு மட்டும் வெடிக்கலையே......

கொஞ்சமும் அசராம அலுங்காம குலுங்காம .......
மெல்ல கிட்ட போயி , லேசா அசச்சு விட்ட
கந்தகம் பத்திக்கிச்சு
உன் உடம்பு பட்டுபோச்சே !

சீக்கிரம் ஆறாதைய்யா......
தீக்காயம் சீக்கிரம் ஆறாதே !

பேனா மையக் கொட்டி
ஒடம்பெல்லாம் தொட்டு வெச்சேன்
மிச்சத்துக்கு மாவு பத்து போட்டு வெச்சேன் .....

மகனே நீ தூங்கு !
வலியோட தூங்கு ......
வலி மரத்து போகும் ....
வறுமையோட வாழ்க்கையும் பழகி போகும் .....

கண்ணே கொஞ்சம் பொறுத்துக்க ....
சீக்கிரமா கொணமாகும்...
காயங்கள் நம்ம வாழ்க்கை போலல்ல .....
சீக்கிரமே குணமாகும் ......

( அந்த கண்களில் கசிவது கண்ணீரல்ல ....... நிறமற்ற இரத்தமென்று உணர்ந்த ஓர் இரவில் பிறந்த தாலாட்டு கவிதை இது )