Tuesday, September 2, 2008 | By: காவிரி நாடன்

என் அம்மாவுக்கு

இன்னும் என் நினைவிருக்கிறதா அம்மா ?

எங்கே தொலைத்தாயம்மா - என்னை
எங்கே தொலைத்தாய்

சந்தைகளில் தொலைத்தாயா -
திருவிழாக்களில் மறந்தாயா -
திருடனேதும் பறித்தானா ?

எங்கே தொலைத்தாயம்மா - என்னை
எங்கே தொலைத்தாய் ?

சாலைகளில் சில மாலைகளில்
தாயின் விரல் கோர்த்து நடக்கும் பிள்ளைகள்...
நானும் விரல்பிடிக்க மறந்தேனோ -
உன்னை தொலைத்தேனோ ?
நீயாவது என் கரம் பிடித்திருக்க கூடாதா ?

உன் மடி மீது
தலை சாய்த்ததில்லை

உன் நெற்றி முத்தம்
ருசித்ததில்லை

உன் உள்ளங்கை சூடு
என் கன்னங்கள் உணர்ந்ததில்லை

என் தலை கோதும் உன் விரல்கள்
பற்றி விளையாடியதில்லை

உன் சேலைகளில்
ஒளிந்து விளையாடியதில்லை

உன் விரல் ருசி
என் உதடுகள் அறிந்ததில்லை

ஒரு முறையேனும் ஊட்டி விடுவாயா ?
அம்மா...
அது விசமென்றாலும் சம்மதம்.

என்றேனும் சாலைகளில் சந்தித்தால்...
அடையாளம் காண்பாயா - இல்லை
கடந்து செல்வாயா ?

காலம் சம்மதிக்குமா அம்மா
நம் சந்திப்பிற்கு...

மௌனமே மொழியாய்...

முதன் முதலாய் சந்தித்தோம்
காற்று கலைத்த ஒற்றை முடி
கதிர் கலைத்த இன்முகம்
அச்சம் குடித்த பார்வைகள்
தயக்கம் படிந்த வார்த்தைகள்
ஒற்றை புன்னகையில் விடைபெற்றோம்


மாலைகளில் சந்தித்தோம்
கவிதை நூல்கள் பகிர்ந்தோம்
ரசனைகள் அறிந்தோம்
பொறாமை கண்கள் பெற்றோம்
புன்னகைத்தோம் -
மீண்டும் மீண்டும் விடைபெற்றோம்


கருத்து வேற்றுமை கொண்டோம் -
என் கருத்துக்கு நீயும்
உன் கருத்துக்கு நானும் உருமாறினோம்
நமக்காக
நம் கருதுக்களோடே வேற்றுமை கொண்டோம்
தனிமைகளில் புன்னகைத்தோம்


விமர்சனங்களால் கிழிந்தோம்
விமர்சனங்களை கிழித்தோம்
சில விழிகளில் விழுந்தோம்
பல வலிகளில் விழித்தோம்


நட்பின் மீதான பாசம்
தைரியத்தின் தலை கொய்தது
நாகரிகத்தின் உச்சம்
நம் நேசம் புதைத்தது


புரியாத மௌனங்கள்
சொல்லாத வார்த்தைகள்
சூழ்நிலையின் சூழ்ச்சிகள்
பொருளாதார வீழ்ச்சிகள்
நாம் கொண்டது நட்பென்று
சத்தியம் செய்தது


எனக்காக நீயும் உனக்காக நானும்
பொய்யென்று அறிந்தும்
நட்பென்றே மௌனித்தோம்
வெறறு புன்னகையோடு விடைபெற்றோம்


அந்தி மாலையில்
கன்னங்களில் கண்ணீரும்.....
சாலைகளில் பாதங்களும்......

வடிந்த கண்ணீர் துளியொன்று
பாதம் நனைத்தது மௌனத்தோடு...